தமிழரசுக் கட்சி வெளியேறினாலும் கூட்டமைப்பின் பலம் சிதையாது – செல்வம் அடைக்கலநாதன்

தமிழரசுக் கட்சி வெளியேறினாலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பலம் இன்னும் நெகிழ்ச்சியடையவில்லை என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், டெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவிலுள்ள தமிழீழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) அலுவலகத்தில் நேற்று முன்தினம் (11) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.

நானும், சித்தார்த்தனும் கட்சி ரீதியாக தமிழரசு கட்சிக்கு எழுதிய கடிதத்துக்கான பதில் வருவதற்கு முன்னர், உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழரசுக்கட்சி தனித்து போட்டியிடுகின்ற முடிவை எடுத்திருந்தார்கள். அந்தவகையில் நாங்கள் வைத்த கோரிக்கைக்கு பதில் தராது, வெளியில் செல்லும் நிலையை அவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள்.

கூட்டமைப்பில் இருந்து வெளியே சென்ற கட்சிகளில் உள்ளே வரவேண்டும் என கருதிய கட்சிகள் எல்லோரும் அணிதிரண்டுள்ளோம். குறிப்பாக இந்தச் சந்தர்ப்பத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் எமது கூட்டில் இணைய வேண்டும் தமிழ் மக்களின் பிரச்சினையை வென்றுறெடுப்பதற்கு, பலமான கூட்டாகப் ஒற்றுமையாக பயணிக்க வேண்டும். அதனடிப்படையில் இந்தக் கூட்டில் வந்து இணைய வேண்டும் என அவர்களிடம் கேட்டுக் கொள்கின்றேன்.

இந்தக்கூட்டு, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட நோக்கத்தின் அடிப்படையில் செயற்படும். கூட்டமைபில் இருந்து ஒரு கட்சி விலகிச் சென்றாலும், கூட்டமைப்பு சிதைவு படாது எனக் குறிப்பிட்டார்.