பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தால் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் முகாமைத்துவ உதவியாளர் ஒருவர் காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் முகாமைத்துவ உதவியாளரான சமந்த ப்ரீத்தி குமார தனது நண்பருடன் நாரஹேன்பிட்டி அலுவலகத்திற்கு அருகிலுள்ள உணவகமொன்றுக்கு பகல் உணவை பெற்றுக்கொள்வதற்காக சென்றிருந்தார்.
தனது நண்பர் குறித்த உணவகத்திலேயே பகல் உணவை எடுத்துக்கொண்ட நிலையில், சமந்த ப்ரீத்தி குமார கொள்வனவு செய்த உணவுப்பொதியுடன் தனியாக அலுவலகத்தை நோக்கி புறப்பட்டுள்ளார்.
இதன்போது, அங்கு ஜீப்பில் வந்த சிலர் ப்ரீத்தி குமாரவை அழைத்துச் சென்றுள்ளனர்.
நேற்று இரவு வரை அவர் நாரஹேன்பிட்டியிலுள்ள தனது தங்குமிடத்திற்கு வராத நிலையில், தொழிற்பயிற்சி அதிகார சபையின் அதிபர் உறவினர்களுக்கு அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவவிடம் வினவியபோது, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் வலையமைப்பு தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கிடையே, அந்த வலையமைப்பின் முக்கியஸ்தர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சமந்த ப்ரீத்தி குமார கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபரிடம் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பின் உயர்மட்ட உறுப்பினர்கள் தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் விசாரணை நடத்திய போது, அவர் போத்தலை இரண்டாக உடைத்து அங்கிருந்த பொலிஸாரை தாக்கியதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.
இதன்போது, பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் இந்த சம்பவத்தை அடுத்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் சந்தேகநபரின் கால்களைத் தாக்கியதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கூறினார்.
இந்த தாக்குதலின் போது சந்தேகநபர் மயக்கமடைந்து கீழே வீழ்ந்ததாக தெரிவித்த பொலிஸ் ஊடகப்பேச்சாளர், தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாகக் குறிப்பிட்டார்.
காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஒரு பிள்ளையின் தந்தையான 41 வயதான சமந்த ப்ரீத்தி குமார, மீட்டியாகொட தெல்வத்த பகுதியை சேர்ந்தவராவார்.
இந்த சம்பவம் தொடர்பில் மருதானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.