நாட்டிலுள்ள வங்கிகளில் ஏ.ரி.எம். இயந்திரங்களை ஹெக் செய்து ஒரு கோடிக்குமதிகமான பணத்தை திருடியுள்ள பல்கேரிய மற்றும் கனேடிய நாடுகளைச் சேர்ந்த இருவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்கள், தெற்காசியாவில் பல நாடுகள் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு சுற்றுலா பயணம் செய்து, இதுபோன்ற பல்வேறு குற்றச்செயல்களை செய்துள்ளதாக கணினி குற்றத்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இவர்கள் ஹிக்கடுவ, காலி மற்றும் பத்தேகம பகுதிகளிலுள்ள 3 ஏ.ரி.எம். இயந்திரங்களில் கடந்த 30 ஆம் திகதி ஹெக் செய்து 110 கோடி ரூபா நிதியை திருடியுள்ளதாகவும் கணனி குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.
48 மணித்தியாலத்திற்குள் இந்நிதியை இவர்கள், திருடியுள்ளனர்.இதற்காக அவர்களுக்கு மீகஹதென்ன பொலிஸ் நிலையத்தின் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரியாக கடமையாற்றும் பொலிஸ் பரிசோதகர் மற்றும் நீர்கொழும்பு இரவு விடுதியொன்றின் உரிமையாளர் உள்ளிட்ட ஐந்து பேர் ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாகவும் கணினி குற்றத்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த நபர் இலங்கையிலிருந்து மலேசியாவுக்கு தப்பிச்செல்ல தயாராகியுள்ள நிலையில், நேற்று அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கணனி குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டார்.
தற்போது அவரது சகாவான பல்கேரிய பிரஜை வௌ்ளவத்தையில் பீற்றர்சன் வீதியிலுள்ள வீடொன்றில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நாட்டைவிட்டு தப்பிச்செல்ல முயன்றுள்ள கனேடிய பிரஜை தொடர்பில் அவரிடமிருந்தே கணனி குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் தகவல்களைப் பெற்றுள்ளனர்.
இந்த வெளிநாட்டவர்கள் இருவரும் பத்துக்கும் அதிகமான நாடுகளுக்குச் சென்று இதுபோன்ற மோசடி களில் ஈடுபட்டுவந்திருந்த போதும் எந்தவொரு நாட்டிலும் அந்த நாட்டு பாதுகாப்பு துறையினரால் அவர்களைக் கைதுசெய்ய முடியாது போயுள்ளது. அதற்குக் காரணம் அவர்கள் தமது பாதுகாப்புக்காக உச்ச பாதுகாப்புகளை பின்பற்றியமையே எனத் தெரியவருகிறது.
அவர்கள் இலங்கையில் கைதுசெய்யப்பட்டுள்ளதையடுத்து அந்தத் தகவல்களை சர்வதேச பொலிஸாருக்கு வழங்குவதற்கும் அவர்கள் சென்றுள்ள நாடுகளில் அதுதொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குமாக தகவல்களை வழங்க கணனி குற்றத்தடுப்புப் பிரிவு கவனம் செலுத்திவருகிறது. இவர்களை கைதுசெய்தபோது அவர்களை விசாரணை செய்த அதிகாரிகளிடம் அவர்கள் தம்மை விடுதலைசெய்தால் 50 இலட்சம் ரூபா பணத்தை வழங்கமுடியுமென குறிப்பிட்டுள்ளனர். அதனை நிராகரித்துள்ள மேற்படி அதிகாரிகளிடம் அவர்கள் தம்முடன் இணைந்து ஏ.ரி.எம். இயந்திரங்களை ஹெக் செய்வதில் உதவுமாறும் கிடைக்கும் பணத்தில் ஒரு பகுதியை அவர்களுக்கு வழங்குவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் காரொன்றில் பயணித்தே இத்தகைய ஏ.ரி.எம். காட் மோசடிகளை மேற்கொண்டுள்ளனர். இந்தக் காரின் சாரதியாக பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே செயற்பட்டுள்ளதாகவும் அவர் பலப்பிட்டி பகுதியைச் சேர்ந்தவரென்றும் தெரியவருகிறது.