மயில் சின்னத்தில் தனித்துப் போட்டியிட தயார் – ரிஷாத் பதியுதீன்

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் எமது கட்சி முன்வைத்துள்ள கோரிக்கைகளை ஐக்கிய மக்கள் சக்தி நிராகரித்தால், மயில் சின்னத்தில் தனித்துப் போட்டியிடுவோமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

புத்தளம் மாவட்டத்தில் புத்தளம், சிலாபம் நகர சபைகள், புத்தளம், கற்பிட்டி, வன்னாத்தவில்லு, ஆராச்சிக்கட்டுவ உள்ளிட்ட உள்ளுராட்சி மன்றங்களில் போட்டியிடுவது தொடர்பில் கட்சியின் முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடல் புத்தளத்தில் நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தையின் போது நாம் சில கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறோம். எமது கோரிக்கைகளை ஐக்கிய மக்கள் சக்தி ஏற்றுக்கொள்ளுமாக இருந்தால் அவர்களோடு இணைந்து போட்டியிடுவோம். நிராகரித்தால், தனித்துப் போட்டியிடவும் கட்சி தயாராகவே இருக்கிறது என தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சில மாவட்டங்களில் தனித்தும், ஐக்கிய மக்கள் சக்தியோடு சில மாவட்டங்களில் இணைந்தும் போட்டியிடும். இதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் ஒரு சிறிய தேர்தலாக இருந்தாலும், எமது நாட்டு மக்கள் யாரை விரும்புகிறார்கள்இ, எந்தக் கட்சியை விரும்புகிறார்கள் என்பது தொடர்பிலான செய்தியை சர்வதேச நாடுகளுக்கு சொல்ல உதவும் என நம்புவதாகவும் இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் குறிப்பிட்டார்.