இலங்கை இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாவது டி20 போட்டி இன்று

இந்தியாவுடனான முதலாவது டி20 போட்டியில் இலங்கை அணி கடைசி பந்துவரை போராடி 2 ஓட்டங்களால் தோல்வியை சந்தித்த நிலையில் தீர்க்கமான இரண்டாவது டி20 போட்டியில் இன்று ஆடவுள்ளது.

மூன்று போட்டிகளைக் கொண்ட இந்த டி20 தொடரில் இந்திய அணி 1–0 என முன்னிலை பெற்று தொடரை கைப்பற்றும் எதிர்பார்ப்புடனேயே பூனேவில் நடைபெறவுள்ள இன்றைய போட்டியில் களமிறங்கவுள்ளது.

மறுபுறம் தசுன் ஷானக்க தலைமையிலான இலங்கை அணி முதல் போட்டியில் இந்தியாவுக்கு நெருக்கடி கொடுத்தபோதும் ஒப்பீட்டளவில் எட்ட முடியுமான 163 வெற்றி இலக்கையே தவறவிட்டது.

இந்நிலையில் இன்றைய போட்டியில் இலங்கை அணியில் சில மாற்றங்கள் நிகழ வாய்ப்பு உள்ளது. குறிப்பாக ஆரம்ப துடுப்பாட்ட வரிசை தடுமாற்றம் கண்ட நிலையில் காயத்தில் இருந்து மீண்டுள்ள அவிஷ்க பெர்னாண்டோ களமிறக்கப்பட வாய்ப்பு உள்ளது.

அதேபோன்று அண்மையில் நிறைவடைந்த லங்கா பிரீமியர் லீக் தொடரில் சோபித்த சதீர சமரவிக்ரமவை அணியில் இணைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. மறுபுறம் அண்மைக் காலமாக சோபிக்கத் தவறிவரும் தனஞ்சய டி சில்வா இன்றைய போட்டியில் இடம்பெறுவது கடினமே.

இந்திய இளம் அணி முதல் டி20இல் சிறப்பாக செயற்பட்டது. எனினும் அதன் தலைவர் ஹார்திக் பாண்டியா போட்டியின்போது சிறு உபாதைக்கு உள்ளானார். எனினும் அவர் தொடர்ந்து களத்தடுப்பில் ஈடுபட்ட நிலையில் இன்றைய போட்டியில் அவர் ஆடுவதில் சிக்கல் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டாவது டி20 போட்டி நடைபெறும் மஹராஷ்ட்ரா கிரிக்கெட் சமேளன மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமானதாகும். இந்த ஆடுகளம் துடுப்பாட்ட வீரர்களுக்கு உதவுகின்றபோதும் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்த முடியும். எனவே இரண்டாவது துடுப்பெடுத்தாடும் அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது.